பரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

Update: 2019-09-16 05:51 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை  ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்வங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முழுவதுமாக திரும்பவில்லை. இயல்பு நிலை சீரடைந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில்  கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். தனது மனுவில், “சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என கூறியிருந்தார். 

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்பது குறித்து வரும் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்