இலகுரக போர் ஹெலிகாப்டர் சோதனை வெற்றி - பெங்களூரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது

பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர், இமயமலை பகுதியில் நடந்த உயரத்தில் பறக்கும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2019-09-06 23:20 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் போர் விமானங்களை தயாரிக்கும் எச்.ஏ.எல். நிறுவனம் அமைந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக போர் ஹெலிகாப்டர் (எல்.யு.எச்.) இமயமலை பகுதியில் நடந்த சோதனையில் வெற்றி பெற்றது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆர்.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எச்.ஏ.எல். நிறுவனத்தில் இலகுரக போர் ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இப்போது இமயமலை பகுதியில் அதிக உயரத்தில் பறக்கும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் இந்த ஹெலிகாப்டர், பயன்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது.

இந்த சோதனை இந்திய விமானப்படை மற்றும் ராணுவ விமானிகள் மூலம் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. திட்டமிடப்பட்ட அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 3,300 மீட்டர் உயரத்தில் சர்வதேச வெப்பத்திற்கு இணையாக அதாவது 32 செல்சியஸ் வெப்பத்தில் பறந்து முழுமையான சோதனை நடத்தப்பட்டது.

இந்த அதிகபட்ச வெப்பநிலையில் சோதனை நடத்தப்படுவது என்பது அனைத்துவிதமான சிவில் மற்றும் போர் விமானங்களுக்கான கட்டுப்பாடு ஆகும். இந்த ஹெலிகாப்டர் எந்த தடையும் இன்றி செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் அதிக உயரத்தில் பறந்தபோது, எந்த சேவை உதவியும் இல்லாமல் அதிக நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது.

இந்த ஹெலிகாப்டர், 2018-ம் ஆண்டு நாக்பூரில் அதிக வெப்பத்திலும், சென்னையில் கடல் பகுதியிலும், நடப்பு ஆண்டில் லேயில் அதிக குளிர் பகுதியிலும், புதுச்சேரி கடல் பகுதியிலும் நடந்த சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் இருந்து லே பகுதிக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை அந்த ஹெலிகாப்டர் 3 நாட்களில் சென்றடைந்தது. இவ்வாறு அதில் மாதவன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்