ஏர்செல்-மாக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தனிக்கோர்ட்டு முன்ஜாமீன்

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைகேடு நடந்ததாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

Update: 2019-09-05 23:13 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு ஏற்கனவே இருவரையும் இந்த வழக்கில் கடந்த 3-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று இந்த வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை கலைப்பதற்கோ, மிரட்டுவதற்கோ சாத்தியக்கூறு இல்லை என்பதாலும், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச்செல்வதற்கான சூழ்நிலை இல்லாததாலும், இதேபோன்ற ஒரு குற்றத்தை அவர்கள் மீண்டும் இழைப்பார்கள் என்பதற்கான சாத்தியக்கூறு இல்லாததாலும் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குவதாக நீதிபதி கூறினார்.

இருவரும் கைது செய்யப்பட்டால், கோர்ட்டில் ரூ.1 லட்சம் தொகைக்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு மற்றொரு நபர் உத்தரவாதமும் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அப்போது நீதிபதி கூறினார்.

மேலும் செய்திகள்