காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: வான்வழி பாதையை மூடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தான் தங்களது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-07 20:33 GMT
இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவிற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதில் இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இருநாடுகள் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தான் தங்களது வான்வழி பாதையை மூடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான்  வான்வெளி வழியாக ஏர் இந்தியா தினமும் சுமார் 50 விமானங்களை இயக்குகிறது.

பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே ஜீலை 16-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்பட்டதால், தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்