காஷ்மீரில் உள்ள அழகான பெண்களை இனி திருமணம் செய்து கொள்ளலாம்: பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை
காஷ்மீரில் உள்ள அழகான பெண்களை இனி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பாஜக எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முசாபர்நகர்,
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சைனி என்பவர் , கட்சித் தொண்டர்கள் முன்னர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசினார். அப்போது, “இனி நீங்கள் காஷ்மீரைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்” என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜக தொண்டர்களுக்கு இந்த முடிவு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகாதவர்கள், அங்கு சென்று இனி மணமுடித்துக் கொள்ளலாம். அதில் இனி எந்தப் பிரச்னையும் இருக்காது. முன்னர் பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டு வந்தன. காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவரின் மாநிலக் குடியுரிமை ரத்து செய்யப்படும். இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் வெவ்வேறு குடியுரிமைகள் இருந்ததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
நமது கட்சியில் இருக்கும் முஸ்லிம் தொண்டர்களுக்கு இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இனி அவர்கள் அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். இந்து, முஸ்லீம் என மத வேறுபாடு பாராமல் காஷ்மீர் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவை மொத்த நாடும் கொண்டாட வேண்டும்” என்று கூறினார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து விக்ரம் சைனியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தனது பேச்சுக்கு எந்த வருத்தமும் பதிவு செய்யாத விக்ரம் சைனி, , “இனி காஷ்மீர் பெண்களை எந்தவிதப் பிரச்சினையுமின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். அதுதானே உண்மை. இது காஷ்மீர் மக்களுக்குக் கிடைத்த சுதந்திரமாகும். மோடி எங்களது கனவை நிறைவேற்றியுள்ளார். மொத்த நாடும் அவரின் நடவடிக்கையைக் கொண்டாடுகிறது”என்றார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது விக்ரம் சைனிக்கு இது புதிதல்ல. ஏற்கனவே பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த ஆண்டு துவக்கத்தில், பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விக்ரம் சயினி, “இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் உணர்பவர்கள் மற்றும் தேச துரோகிகள், இங்கு இருக்கத் தகுதியற்றவர்கள். எனக்கு ஒரு அமைச்சகப் பொறுப்பைத் தாருங்கள், அப்படி பேசுவோரை வெடிகுண்டு வைத்து தாக்குகிறேன்” என பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.