திருச்சூரில் மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவிக்கு பாராட்டு

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-07-10 20:30 GMT
பாலக்காடு, 

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பி.எட். தேர்வு

திருச்சூர் மாவட்டம் கொடக்கரா பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். இவருடைய மகள் ஆர்யா பி.எட். படித்து வந்தார். இந்த நிலையில் ஆர்யாவுக்கும் குழிக்காட்டுச்சேரியை சேர்ந்த அகில் பாஸ்கரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ஆர்யாவுக்கு பி.எட். தேர்வும் நேற்று நடைபெற இருந்தது.

இதையொட்டி நேற்று காலையில் கொடக்கரா பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் ஆர்யாவுக்கும், அகில் பாஸ்கரனுக்கும் காலை 9 மணிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் ஆர்யா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சூரில் உள்ள தேர்வு மையத்துக்கு மணக்கோலத்தில் சென்றார்.

பாராட்டு

அங்கு நடந்த தேர்வில் கலந்து கொண்டு மணக்கோலத்தில் தேர்வு எழுதினார். இதைப்பார்த்ததும் தேர்வு எழுத வந்தவர்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தனர். பின்னர் தேர்வு முடிந்ததும் ஆர்யாவுக்கு சக மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் தேர்வு மையத்தில் இருந்த ஆசிரியர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் திருமணம் நடந்த கோவிலுக்கு வந்து திருமண நிகழ்ச்சியில் உறவினர்களுடன் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்