மத்திய பட்ஜெட் 2019: ராணுவத்துக்கு ரூ.3.18 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-05 14:12 GMT
புதுடெல்லி,

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஒதுக்கீடு குறித்து கூறியதாவது:-

2019-2020 நிதியாண்டில், ராணுவ துறைக்கு பட்ஜெட்டில் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 931 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஓய்வூதியம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 79 கோடி சேர்க்கப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 6.87 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கான மூலதன செலவினத்துக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சம்பளம், ராணுவ ஸ்தாபனங்கள் பராமரிப்பு போன்ற வருவாய் செலவினத்துக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறைக்கு ரூ.62 ஆயிரத்து 659 கோடியே 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 18 சதவீதம் அதிகம் ஆகும்.

10 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ வசதி அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துக்கு மட்டும் ரூ.6 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பட்ஜெட்டை விட ரூ.5 ஆயிரத்து 858 கோடி அதிகம் ஆகும்.

இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா மற்றும் இதர சர்வதேச எல்லைகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்த ரூ.2 ஆயிரத்து 129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்