3 கோடி வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடு முழுவதும் 3 கோடி வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது.

Update: 2019-07-05 06:36 GMT
புதுடெல்லி,

2019-20-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதில் முக்கியமாக 3 கோடி சில்லறை வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பிரதான் மந்திரி கர்மயோகி மந்தான் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு வட்டி மானியமாக ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், விரும்பத்தக்க திறன் கொண்ட தேசிய நெடுஞ்சாலை கட்டத்தை உறுதி செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் விரிவான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் அமைப்புக்கு 2019-20-ம் ஆண்டு ஒதுக்கீடாக ரூ.101.29 கோடி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது லோக்பால் நிறுவுதல், கட்டுமானம் தொடர்பான செலவினங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும். லோக்பால் அமைப்பின் அலுவலகம் தற்போது டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.4 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலவிட்டு உள்ளது. இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேச தேர்தல்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு தொகைக்காக மேலும் ரூ.339.54 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி கூறினார்.

மேலும் செய்திகள்