குஜராத் முன்னாள் உள்துறை மந்திரி கொலை வழக்கு; 12 பேர் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

குஜராத் முன்னாள் உள்துறை மந்திரி கொலை வழக்கில் 12 பேரை குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-07-05 06:35 GMT
புதுடெல்லி,

குஜராத்தில் கடந்த 2003ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான அரசில் உள்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஹரேன் பாண்டியா.  இவர் ஆமதாபாத் நகரில் லா கார்டன் பகுதியருகே கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 26 அன்று காலையில் நடை பயிற்சி மேற்கொண்டார்.

அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடினர்.  இதுபற்றிய வழக்கு, விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது.  இதில் 12 பேரை குற்ற சதிக்கான திட்டமிடல், கொலை முயற்சி மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டம் (பொடா) ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.  அவர்களுக்கு 5 வருடங்கள் முதல் ஆயுள் சிறை வரை தண்டனை வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அதில், 12 பேரை குற்ற சதிக்கான திட்டமிடல், கொலை முயற்சி மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டம் (பொடா) ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்த நீதிமன்றம், கொலை வழக்கில் இருந்து 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் குஜராத் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இதனை ஏற்று கொண்ட நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, கொலை வழக்கில் 12 பேரையும் குற்றவாளிகள் என்று இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும் செய்திகள்