மது பாட்டிலில் காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது
மது பாட்டிலில் காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
வெளிநாட்டு பொருட்களில் இந்து கடவுள், இந்திய தலைவர்கள் அவ்வப்போது அவமதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இப்போது அதுபோன்ற ஒரு சம்பவம் இஸ்ரேல் நாட்டில் நடந்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த மல்கா பீர் நிறுவனம், அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி மது பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை வெளியிட்டது. டீசர்ட், கூலிங் கிளாஸ் என அவருடைய புகைப்படம் மாறுபட்ட தோற்றத்தில் இடம்பெற்றது. இது இந்திய நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியால் எழுப்பப்பட்டது.
மாநிலங்களவையில் இவ்விவகாரம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்ட போது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். இஸ்ரேல் அரசை இந்திய தூதரகம் அணுகி முறையிட்டது. இதையடுத்து, மல்கா பீர் நிறுவனம், இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார். மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மது பாட்டில்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.