காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல் மந்திரிகள் இன்று ராகுலை சந்திக்கின்றனர்

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல் மந்திரிகள் இன்று ராகுலை சந்தித்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்த உள்ளனர்.

Update: 2019-07-01 05:07 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சிக்கு தனது குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக  தேர்ந்தெடுக்கும்படியும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தனது முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்று ராகுல் காந்தி 2 நாட்கள் முன்பு திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், அகில இந்திய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள்  ராகுல் காந்தியை இன்று சந்திக்க உள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பாகெல் மற்றும் பாண்டிசேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ராகுல் காந்தியை இன்று மதியம் சந்திக்கின்றனர். 

இந்தச் சந்திப்பிற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இருப்பினும், காங்கிரஸ் தலைவர்களின் தொடர் ராஜினாமா குறித்தும் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்