கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும். என்னுடைய தலையீடு இருக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை கட்சி தலைமை ஏற்கவில்லை. இருப்பினும் தன்னுடைய நிலைப்பாட்டில் ராகுல் காந்தி தீவிரமாக இருந்து வருகிறார். விரைவில் கூடவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
ராகுல் காந்தி இதற்கு பதில் அளிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் என்னுடைய தலையீடு இருக்காது. தலைவரை தேர்வு செய்வது வெளிப்படையாகவே நடக்கிறது எனக் கூறினார். ரபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது எனும் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.