குழந்தைகள் உயிரிழப்பைக் காட்டிலும், கிரிக்கெட் ஸ்கோர் தான் முக்கியமா? அமைச்சருக்கு கண்டனம்
பீகாரில் மூளைக்காய்ச்சல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே கிரிக்கெட் நிலவரம் பற்றி கேட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
பீகாரில் மூளைக்காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கிரிக்கெட் நிலவரம் பற்றி கேட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முசாபர்பூரில், பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேவுடன் நிருபர்களை சந்தித்தார்.
அன்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்ததால், எத்தனை விக்கெட் வீழ்ந்துள்ளது என்று மங்கள் பாண்டே கேட்க, அதற்கு 4 என பதில் வந்தது.
குழந்தைகள் உயிரிழப்பைக் காட்டிலும் கிரிக்கெட் ஸ்கோர் தான் முக்கியமா? என கேட்டுள்ள எதிர்க்கட்சிகள், மங்கள் பாண்டே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தள், காங்கிரஸ், ஹிந்துஸ்தான் ஆவம் மோர்சா, இடது சாரிகள் போன்றவைகள் மங்கள் பாண்டே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தின.
இது ஒருபுறம் இருக்க முன்னதாக நடந்த மற்றொரு ப்ரஸ்மீட்டில், மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார், மூளைக்காய்ச்சல் தொடர்பாக ஹர்ஷவர்தன் பேசிக்கொண்டிருக்க இணையமைச்சரோ தூங்கிக்கொண்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, `நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்’ என்று கூறி சமாளித்துள்ளார்.