நடப்பு ஆண்டில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் விடப்படும்; மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி

நடப்பு ஆண்டில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் விடப்படும் என மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி இன்று கூறியுள்ளார்.

Update: 2019-06-03 10:23 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது.  இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக கடந்த மே 30ந்தேதி முறைப்படி பதவி ஏற்று கொண்டார்.

அவருடன் 24 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 9 பேர் தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாகவும், 24 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.  அவர்களில் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரியாக ரவி சங்கர் பிரசாத் பொறுப்பேற்று கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அரசால் நடத்தப்படும் எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.  நடப்பு ஆண்டில் இந்தியாவில் 5ஜி மற்றும் பிற அலைக்கற்றைக்களுக்கான ஏலம் நடத்தப்படும்.

எனினும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொழிற்சார்ந்த மனப்பான்மையோடும் மற்றும் ஒத்துழைப்போடும் செயல்பட வேண்டும் என கூறினார்.

இது தவிர்த்து 100 நாட்களில் 5ஜிக்கான சோதனை ஓட்டம், 5 லட்சம் வைபை ஹாட்ஸ்பாட்கள் அமைப்பது மற்றும் தொலைதொடர்பு தயாரிப்புகளை ஊக்குவிப்பது ஆகிய பிற விசயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்