புதுச்சேரி சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு
புதுச்சேரி சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
புதுச்சேரி,
புதுவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றியும் பெற்றார். இந்தநிலையில் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. எனவே புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி தரப்பில் தற்போது துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து, முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன் ஆகியோர் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்து வந்தனர். சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று நண்பகல் 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
எனினும், புதுச்சேரியில் உரிய கால அவகாசம் கொடுக்காமல் சபாநாயகர் தேர்தலை நடத்துவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பு செய்தன.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார்.
புதுவை சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகராக சிவகொழுந்து பொறுப்பேற்று கொள்வார்.