பீகாரில் நாளை அமைச்சரவை விரிவாக்கம்
பீகாரில் ஆளும் முதல்-மந்திரி நிதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 4 அமைச்சர்கள் புதிதாக நாளை பதவி ஏற்க உள்ளனர்.
பாட்னா,
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்னர் லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து 'மகா கூட்டணி' மூலம் ஆட்சியை பிடித்தாலும், அந்த கூட்டணி நீண்டநாள் நிலைக்கவில்லை. பின்னர், பாஜக ஆதரவில் நிதிஷ்குமார் ஆட்சி நடத்தி வருகிறார்.
சமீபத்திய மக்களவை தேர்தலில் கூட, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பாஜக - நிதீஷ் கூட்டணி வென்றது. எனினும், தேர்தலுக்கு பிந்தைய பிரதமர் மோடி அரசின் அமைச்சரவையில் நிதீஷ்குமார் கட்சி சேர மறுத்துவிட்டது.
நரேந்திர மோடி அரசில், ஒரு மந்திரி பதவி மட்டுமே அளிக்க முன்வந்ததால், ஐக்கிய ஜனதாதளம் அதில் இடம்பெற மறுத்து விட்டது. எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாகவே நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை பீகார் கவர்னர் லால்ஜி தாண்டனை முதல்-மந்திரி நிதீஷ்குமார் சந்தித்து பேசினார். நாளை 4 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக பீகார் மாநில ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.