கம்யூனிஸ்டு கட்சி தோல்விக்கு ‘சபரிமலை விவகாரம் காரணம் இல்லை’ பினராயி விஜயன் பேட்டி
கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி 20 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து முதல்–மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:–;
திருவனந்தபுரம்,
கம்யூனிஸ்டு கூட்டணி தோல்விக்கு சபரிமலை விவகாரம் ஒரு காரணம் இல்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட்டதும், அவர் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கையிலும் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். சபரிமலை விவகாரம் காரணம் என்றால், பா.ஜ.க.வுக்கு தேர்தல் முடிவு சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
சபரிமலை தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்த போது முதலில் காங்கிரசும், பா.ஜ.க.வும் வரவேற்றது. பின்னர் அரசியல் ஆதாயத்துக்காக இரு கட்சிகளும் ‘பல்டி’ அடித்து விட்டன. நாங்கள் எங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய தேவை இல்லை. ஏனெனில் இது நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தல். சட்டசபைக்கு அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.