ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு கண்டுபிடிப்பு போலீஸ் தீவிர விசாரணை
ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீஸ் தீவிர விசாரணையை மேர்கொள்கிறது.
நெல்லூர் விடவலூரு கிராமப்பகுதியையொட்டி வங்காள விரிகுடா கடற்பகுதியில் இலங்கை பதிவெண் கொண்ட காலிப்படகு ஒன்று மிதப்பதை சிலர் கண்டுபிடித்தனர். கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அனாதையாக மிதந்த இந்த படகு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த படகை ஆய்வு செய்தனர். அப்போது அதில், குடிநீர் பாட்டில்கள், டீசல் கேன் மற்றும் போர்வைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இலங்கையை சேர்ந்த அந்த படகு மூலம் யாராவது மர்ம நபர்கள் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இலங்கையில் கடந்த மாதம் 21–ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலக நாடுகளை உலுக்கிய இந்த சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கிது. இந்த தாக்குதலை தொடர்ந்து அண்டை நாடான இந்தியாவிலும் எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கை கடல் எல்லைப்பகுதியில் கடரோல காவல்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.
குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையம் மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.