10-ம் வகுப்பில் 60% மதிப்பெண் - மகனை பாராட்டிய தாயார் : வைரலாகிய பதிவு
டெல்லியை சேர்ந்த பெண்மணி, பத்தாம் வகுப்புத் தேர்வில் தன் மகன் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதை பெருமையுடன் பேஸ்புக்கில் பதிவேற்றினார். உடனே அந்த பதிவுக்கு இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பாராட்டுகள் குவிந்து விட்டன.
டெல்லியை சேர்ந்த வந்தனா சுபியா கடோச் என்ற பெண்மணி தனது பேஸ்புக் பதிவில், ``என் மகன் 90% மதிப்பெண்ணைப் பெறவில்லை என்றாலும் இந்த 60% மதிப்பெண் எனது மகிழ்ச்சியை மாற்றிவிடவில்லை. சில பாடப்பிரிவுகளைப் படிக்க அவன் எவ்வளவு சிரமப்பட்டான் என்று எனக்குத் தெரியும். இருந்தும் மனம்தளராமல் தேர்வுக்கு முன்னர், ஒன்றரை மாதங்கள் மட்டும் தீவிர கவனத்தோடு படித்து இந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளான்" என பெருமையோடு பதிவிட்டுள்ளார். மேலும் அவரது மகன் ஆமீருக்கும், ``உனக்கான வழியை நீயே தீர்மானித்துக்கொள். உனது நற்குணம், ஆர்வம் மற்றும் அறிவாற்றலை அப்படியே உயிர்ப்புடன் வைத்திரு" என்றெல்லாம் நல்ல அறிவுரைகளைக் கூறியிருந்தார்.
இந்தப் பதிவைப் படித்த பலரும் அந்த பெண்மணிக்கு பாராட்டுகளைக் குவித்து விட்டார்கள். அந்த பதிவுக்கு 15,000+ லைக்குகளும், 2,100 கமென்டுகளும், 7,500 ஷேரிங்குகளும் கிடைத்துள்ளன. பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும், இந்தப் பதிவைப் பார்த்து பெற்றோர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் பலர் கூறியிருந்தார்கள்.