புதுச்சேரி கவர்னரின் சிறப்பு அதிகார விவகாரம்: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு

புதுச்சேரி கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.

Update: 2019-05-08 22:00 GMT
புதுடெல்லி,

புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், ‘புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், அரசு ஆவணங்களை கேட்பதற்கும் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது’ என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் மந்திரிசபை முடிவு அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

மேலும் முதல்-அமைச்சரின் அதிகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட முடியாது என உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்வதாகவும் கடந்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று ஆஜரானார்.

அப்போது அவர், துணைநிலை கவர்னரின் சிறப்பு அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினால் புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து விடும் நிலை ஏற்படும் என்றும் அதனால் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையீடு செய்தார்.

ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். பின்னர் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை அணுகுமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்