காங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளை பிரதமர் மோடி இன்று பட்டியலிட்டு உள்ளார். #PMModi

Update: 2019-05-08 12:58 GMT
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசும்பொழுது, பிரதமர் மோடி எனது தந்தை ராஜீவ் காந்தியை பற்றி புண்படும்படியாக பேசினாலும் கூட, மோடிக்காக அன்பு ஒன்றையே நான் வைத்திருக்கிறேன் என கூறினார்.

அரியானாவின் குருஷேத்ராவில் நடந்த பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார்.  அவர் ராகுல் காந்தி பேசியது பற்றி கூறும்பொழுது, நான் அவர்களின் ஊழலை நிறுத்தினேன்.  அவர்களின் வம்சத்திற்கு சவால் விடுத்தேன்.  இதனால் அவர்கள் அன்பு எனும் முகமூடி அணிந்து கொண்டு என்னை திட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் என்னை ஹிட்லர், தாவூத் இப்ராகிம், முசோலினி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசினர்.  நான் எனது சொந்த வீடான அரியானாவுக்கு வந்துள்ளேன்.  குருஷேத்ரா உண்மையின் பூமி.  அதனால் இங்கிருந்து எனது நாட்டு மக்களுக்கு, அவர்களின் அன்பு அகராதி பற்றியும் மற்றும் எனக்காக அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை பற்றியும் கூற விரும்புகிறேன் என்று கூறினார்.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்னை ஒரு பூச்சி என அழைக்கிறார்.  ஒருவர் மடநாய் என்கிறார்.  மற்றொருவர் பஸ்மாசுரன் என கூறுகிறார்.  வெளிவிவகார மந்திரியாக இருந்தவர் என்னை குரங்கு என கூறுகிறார்.  மற்றொரு மந்திரி தாவூத் இப்ராகிமுடன் என்னை ஒப்பிடுகிறார்.

அவர்கள் எனது தாயாரையும் விட்டு வைக்கவில்லை.  எனது தந்தை யார் என்று கூட அவர்கள் கேட்கின்றனர்.  இவை அனைத்தும் நான் பிரதம மந்திரியானபின் பேசப்படுகிறது என்பதனை நினைவு கூர்ந்திடுங்கள் என கூறியுள்ளார்.

இதுபோன்ற காங்கிரஸ் தலைவர்களின் நடத்தையினை பற்றி ஒருவர் கூட இதுவரை கேள்வி எழுப்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்