8வது மக்களவை தேர்தல்; இந்திரா காந்தி மறைவுக்கு பின் ராஜீவ் காந்தி பிரதமரானார்

இந்தியாவில் இந்திரா காந்தி மறைவுக்கு பின் நடந்த 8வது மக்களவை தேர்தலில் ராஜீவ் காந்தி பிரதமரானார்.

Update: 2019-05-07 16:28 GMT
இந்தியாவில் 8வது மக்களவை தேர்தல் கடந்த 1984ம் ஆண்டு நடந்தது.  இதில் முந்தைய பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் அவரது மகனான ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மிக பெரிய வெற்றியை பெற்றது.  அக்கட்சி 541 தொகுதிகளில் 414 தொகுதிகளை கைப்பற்றியது.

ஆந்திர பிரதேசத்தில் என்.டி. ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேச கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.  இதனால் தேசிய அளவில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.

இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபரில் புதுடெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் என்ற இரு பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இதன்பின், அந்த ஆண்டின் நவம்பரில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.  இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே பெரும் ஆதரவு கிடைத்தது.

அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 1985ம் ஆண்டு வரை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவில்லை.

இதனால் அவற்றை தவிர்த்து 514 தொகுதிகளில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 49.10 சதவீத வாக்குகளுடன் 404 தொகுதிகளை கைப்பற்றியது.  2வது இடம் பிடித்த தெலுங்கு தேச கட்சி 4.31 சதவீத வாக்குகளுடன் 30 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 5.87 சதவீத வாக்குகளுடன் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

அசாம் மற்றும் பஞ்சாப்பில் காலதாமதமுடன் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றியது.  ஷிரோமணி அகாலி தளம் 7 தொகுதிகளையும், இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) மற்றும் அசாம் சமவெளி பழங்குடியின கவுன்சில் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் மற்றும் சுயேச்சைகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

மேலும் செய்திகள்