பிரதமர் மோடியை ரூ.50 கோடிக்காக கொலை செய்வேன் என வீடியோ பதிவு; எதிர்க்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன? பா.ஜ.க. கேள்வி
பிரதமர் மோடியை ரூ.50 கோடிக்காக கொலை செய்வேன் என தேஜ் பகதூர் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் கூறியது பற்றி எதிர்க்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன என பா.ஜ.க. கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற மே 19ந் தேதி நடைபெறும் 7-வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கியது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர்.
நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என புகார் எழுப்பி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகார் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆதாரமற்ற புகார்களை கூறி களங்கம் ஏற்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என எல்லை பாதுகாப்பு படை வட்டார தகவல் தெரிவித்தது.
இதன்பின் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அவரது வழக்கறிஞர் கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ரூ.50 கோடிக்காக கொலை செய்வேன் என தேஜ் பகதூர் கூறுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி பா.ஜ.க.வின் செய்தி தொடர்பு நிர்வாகியான சம்பீத் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, ஏன் அனைவரும் அமைதியுடன் உள்ளனர்? ஏன் ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூட எதுவும் கூறவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இது பிரதமர் பற்றிய மற்றும் அவரது பாதுகாப்பு பற்றிய தீவிர விசயம். கடந்த சில நாட்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேஜ் பகதூரை புகழ்ந்து பேசினார். இந்த வீடியோவுக்கு பின் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? என கேட்டு கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கன்னத்தில் அறையப்படும்பொழுது, பல மாதங்களுக்கு அதுபற்றி பேசி வந்தனர். ஆனால், பிரதமரை கொல்ல தீட்டிய சதி திட்டம் பற்றி எந்த எதிர்க்கட்சி தலைவரும் எதுவும் கூறவில்லை. தேஜ் பகதூர் பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி அவர்கள் நாட்டின் பிரதமர். பா.ஜ.க.வின் பிரதமர் அல்ல. இதுபோன்ற பேச்சுகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற விவகாரங்களில், இப்படி பேசும் மக்களுடன் எதிர்க்கட்சியினர் இணைந்து நிற்பது வருந்தத்தக்க விசயம் என அவர் கூறியுள்ளார்.