வாக்காளர் பட்டியல் தற்போது தயார் ஆகாததால் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

வாக்காளர் பட்டியல் தயார் ஆகாததால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2019-05-05 00:15 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் வக்கீல் ஜெயசுகின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது, மாநிலத்தில் பல வளர்ச்சிப்பணிகளுக்கு தடையாக உள்ளது என்றும், எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு 10 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிடுமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் கமிஷன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் பதில் மனு தாக் கல் செய்யப்பட்டது.

அதில், தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு வரையறை நடந்து வருவதாகவும், இந்த பணி நிறைவு பெற்று தொகுதி மறுவரையரை தொடர்பான அறிவிப்பாணையை அரசு இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பஞ்சாயத்துராஜ் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியலை பெற இயலவில்லை என்ற காரணத்தை தமிழ்நாடு தேர்தல் கமிஷன் கூறி இருக்கிறது. நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தற்போது நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி சரிபார்க்க நாளாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழக அரசை பொறுத்தவரை, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அனைத்து நலத்திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன என்று மனுதாரர் கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

ஏனென்றால் தூய்மை காவலர் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மூலம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

மனுதாரரின் குற்றச்சாட்டு வெறும் ஊகத்தின் அடிப் படையில் அமைந்தது. ஏற்கனவே தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மக்கள் தொகை அடிப்படையில் வார்டு வரையரை, பழங்குடியினர், பெண்களுக்கான வார்டு, இடஒதுக் கீடு ஆகியவற்றின் படி வாக்காளர் பட்டியலை தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதன் அடிப்படையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, அதற்கான அரசாணை குறிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போது வாக்காளர் பட்டியலை தயாரித்து அதனை சரிபார்த்து தரவேண்டிய பணி தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளதால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது. ஏற்கனவே மாநில தேர்தல் கமிஷன் 3 மாதகால அவகாசம் கோரி இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

எனவே வெறும் ஊகத்தின் அடிப்படையிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்