எதிர்க்கட்சி கூட்டணி தேர்தல் கமிஷனை குறை சொல்கிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கிளன் போல்டு ஆன வீரர் அம்பயரை குறை சொல்வதுபோல, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி தேர்தல் கமிஷனை குறை சொல்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Update: 2019-05-04 23:15 GMT
வால்மீகி நகர்,

பீகார் மாநிலம் வால்மீகி நகர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் முதலில் என் மீது குற்றம்சாட்டின. ஆனால் இது தேர்தலில் பலனளிக்கவில்லை என்று தெரிந்துகொண்டதும், 4 கட்ட தேர்தலுக்கு பின்னர் இப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக தேர்தல் கமிஷனை குறை சொல்ல தொடங்கிவிட்டனர்.

கிளன் போல்டு ஆன கிரிக்கெட் வீரர் அம்பயரை குறை சொல்வதுபோல அவர்கள் நடந்துகொள்கிறார்கள். தேர்வில் தோல்வியுற்ற மாணவன் அற்ப காரணங்களை கூறுவதுபோல உள்ளது.

பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற அதன் கூட்டணி கட்சிகள் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லாமல் தலைமை பதவிக்கு வாரிசுகள் வர நினைப்பதால் சுக்குநூறாக நொறுங்கிவிட்டன. அவர்கள் மக்களுக்கு சேவை செய்பவர்களாக தங்களை கருதாமல், ஜனநாயகத்தின் நவீன மகாராஜாக்களாக கருதுகிறார்கள்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் வரும் என்ற அவர்கள் வாக்குறுதி குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்த அவர்கள் ஏழைகளுக்கு உதவியதில்லை. ஏன் ஏழைகளுக்கு வங்கிகளில் கணக்கு கூட தொடங்கப்படவில்லை. இந்த தேர்தல் வாக்குறுதிகள் அரசு கஜானாவில் இருந்து பணத்தை எடுப்பதற்கான மற்றொரு சூழ்ச்சி தானே தவிர வேறு ஒன்றுமில்லை. மக்கள் பணத்தில் அவர்கள் கை வைக்க நான் அனுமதிக்கமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்