ராகுல்காந்தி தொடர்பாக அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு
ராகுல்காந்தியைக் காணவில்லை என்று அவர் போட்டியிடும் அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அமேதி,
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியை காணவில்லை என்று அவர் போட்டியிடும் அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அமேதி தொகுதியில் இரவில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பொதுமக்கள் நிற்பது போன்ற படங்களுக்கு மத்தியில், 15 வருடங்கள் X 365 நாட்கள் = 5475 நாட்கள். எங்கே அமேதி தொகுதி எம்.பி? என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் எங்கே அச்சடிக்கப்பட்டது? யாரால் ஒட்டப்பட்டது என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை.
இரவோடு இரவாக திடீரென முளைத்த இந்த போஸ்டர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் செய்த புகாரின் காரணமாக, உடனடியாக நீக்கப்பட்டன. ராகுல்காந்தியை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.