தேர்தல் கமிஷனை கண்டித்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்
ஆந்திராவில் தேர்தல் கமிஷனை கண்டித்து சந்திரபாபு நாயுடு தர்ணாவில் ஈடுபட்டார்.
அமராவதி,
ஆந்திராவில், நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களையொட்டி, உயர் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் மாற்றி வருகிறது. தலைமை செயலாளர், உளவுப்பிரிவு டி.ஜி.பி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதி நகரில் தலைமை செயலகத்தில் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி கோபால கிருஷ்ண திவிவேதியை சந்தித்தார்.
அப்போது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்துக்கு எதிராக புகார் மனு கொடுத்தார்.
எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் வற்புறுத்தலால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தன்னிச்சையாக தேர்தல் கமிஷன் மாற்றி வருகிறது என்று திவிவேதியிடம் தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தலைமை தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டிய புகார் கடிதம் ஒன்றையும் திவிவேதியிடம் சமர்ப்பித்தார். பின்னர், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு எதிரே சந்திரபாபு நாயுடு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆந்திர அரசின் கருத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக அதிகாரிகளை தேர்தல் கமிஷன் மாற்றி வருகிறது என குற்றம் சாட்டினார்.