கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடம், காங்கிரஸ் 6-வது இடம்
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி 6-வது இடத்திலும் உள்ளன.
புதுடெல்லி,
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்கள் விளம்பர யுக்திகளை மாற்றி வருகின்றன. நாளிதழ், தொலைக்காட்சிகளில் மட்டுமே முந்தைய தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெருமளவு விளம்பரத்துக்காக செலவிட்டு வந்த நிலையில், தற்போது இணைய விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
அந்தவகையில், பிரபல இணைய தேடு பொறி நிறுவனமான கூகுளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிக அளவில் அரசியல் விளம்பரம் செய்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தற்போது வரை கூகுளில் அதிக விளம்பரம் செய்ததில், மத்தியில் ஆளும் பாஜக முதல் இடத்தில் உள்ளது. அக்கட்சி மட்டும் ஒட்டு மொத்த விளம்பர சதவிகிதத்தில் 32 சதவீதம் செய்துள்ளது. கூகுள் விளம்பரத்திற்காக பாஜக ரூ.1.21 கோடியை செலவிட்டுள்ளது. அதேவேளையில், பாஜகவின் நேர் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 6-வது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.54,100 செலவிட்டுள்ளது.
கூகுளில் அதிக விளம்பரம் செய்த கட்சிகள் பட்டியலில் 2-வது இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளது. கூகுள் விளம்பர கொள்கைகளை மீறியதாக 11 அரசியல் விளம்பர நிறுவனங்களில் 4 நிறுவனங்களை கூகுள் நிறுவனம் தடை செய்துள்ளது.