இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனை யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையென யோகி ஆதித்யநாத் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய பாதுகாப்பு படைகளை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பா.ஜனதா ஒவ்வொரு முறையும் இதனை செய்து வருகிறது. டெல்லியில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்ற பேனர்கள் பா.ஜனதா சார்பில் வைக்கப்பட்டது. விமானப்படையின் உடையுடன் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்தனர். மேலும் பா.ஜனதா வெளியிட்ட நானும் காவலாளி வீடியோவிலும் ராணுவம் இடம்பெற்றது. இதற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
இந்திய பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்வதற்கு பதிலாக, நீங்கள் செய்த சாதனையை பேசி அரசியலில் ஈடுபடுங்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையென யோகி ஆதித்யநாத் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உ.பி.யில் பிரசாரம் ஒன்றில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்தது, ஆனால் மோடியின் ராணுவம் அவர்களுக்கு புல்லட் மற்றும் வெடிகுண்டுகளை வழங்கியது. இதுதான் வேறுபாடு. மசூத் அசாரை காங்கிரஸ் ஜியென அழைத்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். யோகி ஆதித்யநாத் ராணுவத்தை மையப்படுத்திய பிரசாரம் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. யோகி ஆதித்யநாத் ராணுவத்தை மோடியின் ராணுவம் என கூறியுள்ளார். இது பாதுகாப்பு படைகளை அவமதிக்கும் செயலாகும். இந்திய பாதுகாப்பு படைகள் பிரசார மந்திரியின் (பிரதமர்) படைகள் கிடையாது. யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. வாக்குக்காக இந்திய ராணுவம் அவமதிக்கப்படுகிறது என திரிணாமுல் காங்கிரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிற கட்சிகளும், நெட்டிசன்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.