உத்திரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பாஜக எம்.எல்.ஏ. மீது துப்பாக்கிச் சூடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்கிம்பூர்,
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நேபாள எல்லையில் உள்ளது. இந்த லக்கிம்பூர் கேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக யோகேஷ் வர்மா பதவி வகித்து வருகிறார். இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
நேற்று முதல் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் விதமாக லக்கிம்பூர் கேரியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது யோகேஷ் வர்மா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவருடைய காலில் குண்டு பாய்ந்தது.
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை ஒரு சில தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.
இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ யோகேஷ் வர்மாவும் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.