பா.ஜ.க.வில் இணைந்த சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருந்தவர் டாம் வடக்கன். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.
இதன்பின் உடனடியாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, காங்கிரசில் இருக்கும்பொழுது, அதிகார மையத்தில் இருப்பவர் யாரென்று தெளிவாக தெரியாத சூழ்நிலையில் நான் அதிகம் துன்புறுத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.
புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் மற்றும் இதற்கு இந்திய தரப்பிலான பதிலடி ஆகியவற்றில் காங்கிரசின் நிலை ஆகியவை பற்றியும் அவர் தாக்கி பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காங்கிரசின் எதிர்வினை வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வளர்ச்சிக்குரிய விசயங்களில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.