இந்திய ராணுவத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் மோடி மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி புகழாரம்
இந்திய ராணுவத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் மோடி என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி புகழாரம் சூட்டியுள்ளார்.
பெரும்பாவூர்,
திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரில், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.ஏன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பரிவர்த்தனை யாத்திரை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு பிராந்திய தலைவர் எம்.ஜி.பிரஷாந்த்லால் தலைமை வகித்தார். இந்த யாத்திரையை மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இராணி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய மக்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். நமது எல்லை பாதுகாப்பு படையினரை கொன்ற தீவிரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுத்து இந்திய ராணுவத்தின் வலிமையை உலகிற்கு பறை சாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி.
அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி நமது ராணுவத்தின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்தி வருகிறது. கேரளாவில் தங்களது தொண்டர்களை வேட்டையாடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இந்திய அரசியலில் கூட்டணி வைத்துள்ள கட்சி காங்கிரஸ். இது கட்சி தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? இந்தியாவில் ஏழை எளியவர்களின் நலனுக்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள செயல் திட்டங்களை வகுத்து சிறப்பாக நிறைவேற்றி வருபவர் பிரதமர் மோடி.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் 50 வருடம் ஆட்சி நடத்திய காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஐந்து வருடங்களுக்குள் மோடி அரசு செய்த சாதனைகள் ஏராளம். கேரளாவின் வளர்ச்சி, மக்களின் நலன் ஆகியவற்றிற்கு செயல் திட்டங்களை மத்திய அரசு நடப்பாக்கி வருகிறது. எனவே கேரளாவின் வருங்கால தலைமுறைகளின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் ஒரு ஆட்சி மாற்றம் அவசியம். அதனை முன் நிறுத்தியே இந்த பரிவர்த்தனை யாத்திரை நடத்தப்படுகிறது.
இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.