சாரதாவின் ‘‘சதுரங்க வேட்டை’’ : ஆசையை தூண்டி ரூ. 30 ஆயிரம் கோடி அபேஸ்

‘‘உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதே, எங்களின் லட்சியம். இரவில் நீங்கள் காணும் கனவுகளை எல்லாம் நிஜமாக்குகிறோம்”. இது தான் சாரதா நிறுவனத்தின் முழக்கம். இந்த முழக்கத்தை நம்பி ஏமாந்தவர்கள் 17 லட்சம் பேர். அவர்கள் இழந்த தொகை ரூ.30 ஆயிரம் கோடி.

Update: 2019-02-05 00:06 GMT
சதுரங்க வேட்டை படத்தில் சொல்வது போல மக்களின் ஆசையை எல்லாம் தூண்டி விட்டு, அவர்களின் பணத்தை சிறுக, சிறுக இந்த நிறுவனம் பறித்தது. 

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சாரதா சிட் பண்ட் நிறுவனம், கடந்த 2006-ம் ஆண்டு தான் தன்னை ஒரு நிறுவனமாக பதிவு செய்தது. இந்த நிறுவனம், ‘‘உங்களது முதலீட்டுக்கு அதிக வட்டி தருகிறோம்‘‘ என்ற ஆசை வார்த்தை கூறி முதலீட்டை பெற தொடங்கியது. அதிக வட்டி கிடைக்கும் என்பதால் ஏழை மக்களும் அதிக அளவில் இதில் முதலீடு செய்ய தொடங்கினர். பொதுமக்களிடம் இருந்து முதலீட்டை பெறுவதற்கு பல ஆயிரம் இளைஞர்களை இந்த நிறுவனம் களத்தில் இறக்கியது. அவர்கள் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் இருந்து பணத்தை முதலீடாக பெற தொடங்கினார். ஒரு கட்டத்தில் மேற்கு வங்கம் மட்டுமின்றி அசாம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் சாரதா நிறுவனம் தனது சிறகை விரித்தது. 

200 கம்பெனிகள்

இந்த நிறுவனத்தின் பொனி என்ற திட்டம், மீன் வலையில் சிக்குவது போல மக்கள் இவர்களிடம் கொத்து, கொத்தாக சிக்கினர். அந்த திட்டத்தின் ஒன்று அதிர்ஷ்ட குலுக்கல். அதில் பெயர் வந்து விட்டால் மாத சேமிப்பு தொகையை செலுத்த தேவையில்லை. மற்றொன்று தொடர் சங்கிலி திட்டம். அதில் தொடர்ந்து உறுப்பினர்களை சேர்த்து விட்டாலும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த தேவையில்லை. மேலும் மாத சேமிப்பு, ஆண்டு சேமிப்பு, வைப்பு நிதி என சுமார் 3 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிகளை சாரதா நிறுவனம் வசூலித்தது. இந்த தொகையின் மூலம் சுமார் 200 கம்பெனிகள் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் சுற்றுலா, வாகனங்கள் தயாரிப்பு, ஓட்டல்கள், பத்திரிகை, திரைப்படத்துறை என அனைத்திலும் கால் பதித்தது. 

கடந்த 2009-ம் ஆண்டு சாரதாவின் அபார வளர்ச்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த செபி, இதன் வருமானத்தை கண்காணிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியது. அதன்பின் தான் சாரதா நிறுவனம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவர தொடங்கின. மத்திய அரசின் கழுகு பார்வையும் இந்த நிறுவனத்தின் மீது விழ தொடங்கின. இதற்கிடையில் 2012–ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னர், சாரதா நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனாலும் அந்த நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

210 பேர் பலி

இதற்கிடையில் முதலீடாக பெற்ற பணத்தை காலக்கெடு முடிந்ததால் ஏராளமானோர் திருப்பி தருமாறு கேட்டனர். அப்போது தான் இந்த நிறுவனம் தடுமாற தொடங்கியது. ஒரு கட்டத்தில் பணம் இப்போது இல்லை என்று கூற தொடங்கியது. இதனால் பொதுமக்களும், அதில் பணியாற்றிய ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். இதனால் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து  மேற்கு வங்கம் மட்டுமின்றி அருகில் உள்ள மாநிலங்களிலும் மிகப்பெரும் கலவரம் வெடித்தது. முதலீடு செய்த பணம் பறி போய் விட்டதே என்ற ஏக்கத்தில் 100–க்கும் மேற்பட்ட மக்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து பல அதிகாரிகளும் தற்கொலை செய்தனர்.

குறிப்பாக அசாம் மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்ற சங்கர் பருவா, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சாரதா நிதி நிறுவனத்தால் அரசின் கணக்குப்படி 210 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மிக குறைவு என்றும் கூறுகின்றனர். நம்பிய மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி, பல உயிர்களை காவு கொண்ட சாரதா நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் 9–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

சாரதாவும் – மம்தாவும்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். எனவே அவரையும், அவரது திரிணாமுல் கட்சியினரையும் சாரதா நிறுவனம் தொடர்பான வழக்குகள் சுற்றி கொண்டு இருக்கின்றன. இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லாமல் இல்லை. மம்தா பானர்ஜி வரைந்த ஓவியத்தை சாரதா நிறுவனம் ரூ.1 கோடியே 80 லட்சம் வரை கொடுத்து வாங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக அந்த நிறுவனத்தின் நாளிதழ்கள், மேற்கு வங்க நூலகங்களில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு ஆரம்பத்திலேயே எழுந்தது. அது தவிர திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் சாரதா நிறுவனத்தின் ஊழியர்கள் போலவே செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குணால் கோஷ் சாரதா நிறுவனத்தில் இருந்து மாதம்தோறும் ரூ.15 லட்சம் ஊதியம் பெற்று வந்தார். அதே போல் மற்றொரு எம்.பி. ஸ்ரீஞ்ஜாய் போஸ், சாரதா நிறுவனத்தின் பத்திரிகை மற்றும் டி.வி. தொழில்களை தலைமை ஏற்று நடத்தி வந்தார். அந்த கட்சியின் மாநில போக்குவரத்து அமைச்சர் மதன்மித்ரா, சாரதா நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். ஜவுளித்துறை அமைச்சர் ‌ஷயாம்படா முகர்ஜியின் சிமெண்டு நிறுவனத்தை சாரதா நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. இவர்கள் தவிர, அசாம் மற்றும் பிற மாநில அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.பி.க்களும் சாரதா நிறுவனத்தில் தொடர்பு வைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவை அனைத்திற்கும் மேலாக அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புக்கு சாரதா 

நிறுவனம் நிதி உதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே வங்கதேச அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இதற்கு மம்தா பானர்ஜி வங்கதேச தூதரை அழைத்து கண்டித்தார். 

வரி விதிப்பு

சாரதா நிறுவனம் மூடப்பட்ட போது மம்தா பானர்ஜி, ‘‘அது முடிந்தது, முடிந்தது தான்” என்று தனது கருத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி, சாரதா நிறுவனத்தால் பணத்தை இழந்த ஏழைகளுக்கு வழங்க மம்தா, அரசு நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கினார். மேலும் அந்த மாநிலத்தில் விற்கப்படும் சிகரெட்டுக்கு தனி வரி விதிப்பு ஒன்றையும் அறிவித்தார். ஆனால் இதற்கு ரிசர்வ் வங்கி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

சாரதா நிறுவனம் மூடப்பட்டு பிரச்சினை தொடங்கியவுடன், அதன் தலைவர் சுதீப்தோ சென் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி சி.பி.ஐ.க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ‘‘எனது பணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பறித்து கொண்டனர். அதன் தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ், நஷ்டம் அடையும் துறைகளில் எல்லாம் என்னை முதலீடு செய்ய வைத்து விட்டார். எனது டி.வி. நிறுவனத்தையும் குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டினார்” என்று கூறினார். இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது.

நாயகன் – நாயகி

சாரதா நிறுவனத்தின் தலைவர் பெயர் சங்காரத்தியா சென். நக்சல் இயக்கத்தில் இருந்த இவர் கடந்த 2000-ம் ஆண்டு தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, பெயரை சுதீப்தோ சென் என்று மாற்றி கொண்டார். நிலத்தை மொத்தமாக வாங்கி அதனை தவணை முறையில் மக்களுக்கு விற்பனை செய்ய தொடங்கினார். மக்களை எளிதாக கவர வேண்டும், அவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கொல்கத்தா மக்கள் நன்கு அறிந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியான சாரதா தேவியின் பெயரை தனது நிறுவனத்திற்கு வைத்தார். சுதீப்தோ சென் மிகவும் நன்றாக பேச கூடியவர். தனது அழகால் அனைவரையும் வசீகரிப்பார் என்று கூறுவார்கள். ஆனால் இன்று அவர், ஜெயிலில் உடல் மெலிந்து நோயாளி போல் காட்சி தந்து கொண்டு இருக்கிறார்.  

சாரதா நிறுவனத்தின் மற்றொரு தலைவர்  டெப்ஜானி முகர்ஜி. விமான பணிப்பெண்ணான இவர், சாரதா நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியில் சேர்ந்தார். ஆனால் நிறுவன தலைவர் சுதீப்தோ  சென்னுடன்  ஏற்பட்ட பழக்கத்தால், அந்த நிறுவனத்தின் தலைவராக உருவெடுத்தார். ஆனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே, ஒன்றாக வாழ்ந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. 

நளினி சிதம்பரம்

சாரதா நிறுவனத்தின் வழக்குகளில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆஜராகி வந்தார். அவருக்கு சாரதா நிறுவனம் ரூ.1 கோடி 40 லட்சம் ஊதியம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணம், மக்களின் முதலீட்டு பணம் என்று குற்றச்சாட்டு கூறி நளினி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்