சொராபுதின் என்கவுண்ட்டர் வழக்கு தீர்ப்பு: ராகுல் காந்திக்கு அருண் ஜெட்லி அறிவுரை

சொராபுதின் என்கவுண்ட்டர் வழக்கு தீர்ப்பு தொடர்பாக, ராகுல் காந்திக்கு அருண் ஜெட்லி அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2018-12-31 23:15 GMT
புதுடெல்லி,

குஜராத்தில் நடந்த சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சொராபுதினை யாரும் கொல்லவில்லை. அவர்கள் தாமாகவே இறந்து விட்டனர்” என்று கிண்டலாக கூறி இருந்தார்.

அதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று தனது ‘முகநூல்’ பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

சொராபுதின் வழக்கில் தீர்ப்பை விட நீதிபதி கூறிய கருத்துதான் மிகவும் முக்கியமானது. “ஆரம்பத்தில் இருந்தே உண்மையை வெளிக் கொணர முறையாக விசாரணை நடத்தாமல், அரசியல்வாதிகள் மீது திருப்பும் வகையிலேயே விசாரணை அமைப்பு நடந்து கொண்டது” என்று நீதிபதி கூறியுள்ளார்.

எனவே, சொராபுதினை கொன்றது யார்? என்று கேட்பதை விட சொராபுதின் வழக்கு விசாரணையை கொன்றது யார்? என்று ராகுல் காந்தி கேட்டிருக்க வேண்டும். அதற்கு சரியான பதில் கிடைத்திருக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்