கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார், கட்சி மேலிடம் விசாரணை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் மேலிடம் விசாரணையை தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பி.கே. சசி, பாலக்காட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து பாலியல் ரீதியில் தொல்லை செய்ததாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த பெண் தலைவர் ஒருவர் கட்சி மேலிடத்தில் புகார் கொடுத்துள்ளார். மாநில தலைமையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலையில் மத்திய தலைமைக்கு புகாரை அனுப்பியுள்ளார். கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினரான பிருந்தாகரத்துக்கு முழு தகவலை அனுப்பியுள்ளார். கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி டெல்லியில் சீதாராம் யெச்சூரியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் ‘‘ஆமாம், எனக்கு நேற்று (நேற்று முன்தினம்) புகார் வந்து இருக்கிறது. அதை கேரள மாநில கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளேன். அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்’’ என பதில் அளித்தார். இதுபற்றி எதுவும் தெரியாது என கூறும், பி.கே. சசி, இது அரசியல் ரீதியிலான சதி என்றும், விசாரணை நடத்தினால் உண்மையான கம்யூனிஸ்டாக அதை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார். கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் பி.கே. சசி மீதான புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.