கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் பலி
கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். #RatFever #Kerala
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, தீவிரமடைந்து அம்மாநில மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. வெள்ளம் வடிந்த நிலையில் மீட்புப் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், மழைக் காரணமாக நோய்த் தொற்றுகளும் அதிகரித்துள்ளது. அதில் முக்கியமான எலிக்காய்ச்சலும் ஒன்று.
எலியின் சிறுநீர் மூலம் (லெப்டோஸ்பை ரோசிஸ்) மனிதர்களுக்கு எலிக்காய்ச்சல் பரவுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 842 மக்களில் 372 பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் தற்போது வரை எலிக்காய்ச்சலால் 66 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட தொற்று நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் தாங்களாகவே சுய சிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்கும்படியும், அருகில் உள்ள சுகாதார மையத்தை ஆலோசிக்கவும் கேரள அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சல் குறித்து கேரள சுகாதார அமைச்சர் கே கே சைலஜா கூறுகையில், மாநிலத்தில் பரவி வரும் எலிக்காய்ச்சல் தொற்றுநோய் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.