2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிற்பட்ட வகுப்பினர் விவரம் சேகரிக்கப்படும்
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிற்பட்ட வகுப்பினர் விவரம் சேகரிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
வி.பி.சிங் ஆட்சி காலத்தில், மண்டல் கமிஷன் சிபாரிசுப்படி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி.) மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1931-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளி விவரங்கள் அடிப்படையில், அந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, சுதந்திர இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதை நடத்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான தயார்நிலை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு நடத்தினார். அந்த கூட்டத்தில், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை சேகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பு நடத்தும் முடிவை, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா பயன்படுத்திக்கொள்ளும் என்பதால், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.