நம் அரசியலமைப்பில் வன்முறைக்கு இடமில்லை - ராம்நாத் கோவிந்த்

நம் அரசியலமைப்பில் வன்முறைக்கு இடமில்லை என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Update: 2018-08-06 13:40 GMT
திருவனந்தபுரம்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று நடைபெற உள்ள சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவை குறிக்கும் வகையில் ‘ஜனநாயக திருவிழா’வை தொடங்கி வைத்தார்.

விழாவை தொடங்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

விவாதம், பரஸ்பர கண்ணியம், அடுத்தவர் கருத்தை மதித்தல் ஆகிய வரலாறு, கேரள சமூகத்தின் தர முத்திரையாக உள்ளது.  இருப்பினும் குறிப்பிட்ட பகுதிகளில் நிகழும் அரசியல் வன்முறைகள் அதற்கு முரணாக உள்ளது.  இந்த எண்ணத்தைத் தடுக்க அனைத்து கட்சியினரும், குடிமகன்களும் தங்களால் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். ஜனநாயகத்துக்கு விழா எடுக்கும் இந்த நேரத்தில், நம் அரசியலமைப்பில் வன்முறைக்கு இடமில்லை என்பதை நினைவில் கொள்வது சரியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில், மாநில கவர்னர் சதாசிவம், முதல்-மந்திரி  பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். 

அதன்பின்னர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கிறார். ‘சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான அதிகாரங்களை பெறுவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 7-ம் தேதி திரிச்சூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்