"காலா" படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு

கர்நாடகாவில் "காலா" படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KAALA

Update: 2018-06-04 13:44 GMT
பெங்களூரு,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா‘ என்கிற ‘கரிகாலன்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் ‘காலா‘ படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அத்துடன் கர்நாடகத்தில் ‘காலா‘ படத்தை திரையிடக் கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும் கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து கர்நாடகத்தில் ‘காலா‘ படத்தை திரையிட தடை செய்து கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் ‘காலா‘ திரைப்படம் வெளியாகுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறும்போது, கர்நாடக மக்களும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் ‘காலா‘ படம் வெளியாவதை விரும்பவில்லை. இதுபற்றி நான் ஆலோசித்து முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்