வால்மீகிக்கு எதிராக அவதூறு கருத்து நடிகை ராக்கி சவந்துக்கு முன்ஜாமீன்
ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த இந்தி நடிகை ராக்கி சவந்துக்கு முன்ஜாமீன் அளித்து கோர்ட்டு உத்தரவு.
லூதியானா,
ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து இந்தி நடிகை ராக்கி சவந்த் கடந்த ஆண்டு ஒரு தனியார் டெலிவிஷனில் ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தார். அக்கருத்துகள், வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சமூகத்தினர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால், ராக்கி சவந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
இருப்பினும், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வக்கீல் நரேந்தர் அதியா என்பவர் லூதியானா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் ராக்கி சவந்துக்கு ஜாமீன் அளித்த கோர்ட்டு, அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், ஜாமீனை ரத்து செய்தது.
இதையடுத்து, லூதியானா செசன்சு கோர்ட்டில், ராக்கி சவந்த் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி குருர்பிர் சிங், ராக்கி சவந்துக்கு முன்ஜாமீன் வழங்க கூறியதுடன், நாளை (திங்கட்கிழமை) கோர்ட்டில் சரண் அடையுமாறு அவருக்கு உத்தரவிட்டார்.