சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் விபத்திற்கு ஆக்சிஜன் கசிவே காரணம்: சிஏஜி அறிக்கை
கடந்த 2013 ஆம் ஆண்டில் மும்பையில் ஏற்பட்ட விபத்தில் நீர்மூழ்கி கப்பலான சிந்துரக்ஷக் வெடித்தது. இந்த விபத்திற்கு ஆக்சிஜன் கசிவே காரணம் என்று தணிக்கைத்துறை அறிக்கை கூறியுள்ளது.
புதுடெல்லி
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கைத்துறை அறிக்கையானது நீர்மூழ்கி கப்பலிலிருந்து செலுத்தப்படும் குண்டிலிருந்து வெளியேறிய ஆக்சிஜனால்தான் வெடிப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இது பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட உயர்நிலை விசாரணைக்குழு 2013 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 14 அன்று ஏற்பட்ட விபத்தை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்களை கூறியுள்ளது. இதையே தணிக்கைத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் இறந்தனர். சமீபகாலமாக ஏற்பட்ட விபத்துகளில் பெரியதொரு விபத்தாக இது கருதப்படுகிறது.
நீர்மூழ்கி கப்பலை பழுது பார்க்க இரண்டு வாரகால அவகாசம் அளிக்கப்பட்டிருக்க ஒரே வாரத்தில் அது பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. நீர்மூழ்கியின் அனைத்துப் பிரிவுகளிலும் நெருப்பு மற்றும் புகையை எச்சரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. “ இரண்டு மணி நேரங்களில் இரு தீ விபத்துகள் நீர்மூழ்கியில் ஏற்பட்டுள்ளன. அதுவும் ஒரே கம்பார்ட்மெண்டில் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் முதலில் ஏற்பட்ட தீ முழுவதுமாக அணைக்கப்படவில்லை என்பதே” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தணிக்கை அறிக்கை கடற்படையின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் ஏற்பட்ட விபத்துகளையும் பட்டியலிட்டு காட்டியுள்ளது.
விபத்தை விசாரணை செய்தக் குழு நீர்மூழ்கியை இயக்கும் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டிய தேவைகளை வலியுறுத்தியுள்ளது என்றும் தணிக்கைத்துறை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.