துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா நாயுடு வேட்பு மனு தாக்கல்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வெங்கையா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புதுடெல்லி,
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள், துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தியை கடந்த வாரம் வேட்பாளராக அறிவித்தன.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய ஜனதாதளம் துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்தது.
ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு முடிவடையும் வரை காத்திருந்த பா.ஜனதா நேற்றுமுன்தினம் இரவு தனது ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்து.
இதையடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக அவரும் உடனடியாக தான் வகித்து வந்த மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அவருடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட நிலையில் வெங்கையா நாயுடு நேற்று காலை டெல்லியில் பாராளுமன்ற வளாக அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும், சிவசேனா, அ.தி.மு.க. மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் உடன் இருந்தனர்.
பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வெங்கையா நாயுடுவின் பெயரை முன்மொழியவும், வழிமொழியவும் செய்தனர். வெங்கையா நாயுடுவுக்காக கூடுதல் வேட்பு மனுக்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
பின்னர் பிரதமர் மோடியும் மற்ற தலைவர்களும் வெங்கையா நாயுடுவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தியும் தேர்தல் அதிகாரியிடம் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, சரத்யாதவ்(ஐக்கிய ஜனதாதளம்), சீதாராம் யெச்சூரி(மார்க்சிஸ்ட்), டி.ராஜா(இந்திய கம்யூனிஸ்டு), தாரிக் அன்வர், பிரபுல் பட்டேல்(தேசியவாத காங்கிரஸ்), பரூக் அப்துல்லா(தேசிய மாநாட்டு கட்சி), கனிமொழி(தி.மு.க.) ஆகியோரும் உடன் இருந்தனர்.
மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று இருவரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.