பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2017-07-18 04:12 GMT

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10-ந் தேதி, டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஆய்வு செய்தபின்பு, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறினார்.

இதுதொடர்பாக கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனை சத்தியநாராயணராவ் மறுத்து வந்தார். இந்த நிலையில், சசிகலாவை சந்திக்க வருபவர்களுடன், அவர் பேசுவதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது.


வராண்டாவுடன் கூடிய தனிப்பட்ட அறை. 

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட மற்றொரு அறை.

அதாவது சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும் (பெட்ரூம்), தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஒரு அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் பேசுவதற்காக பார்வையாளர் அறையும் மற்றும் யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


பொருட்கள் வைக்கப்பட்டு உள்ள அறை. 

அந்த அறைகள் பற்றி வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


அறைக்கதவில் துணி போட்டு மறைத்து இருப்பதை படத்தில் காணலம். 

 சசிகலா தங்கி இருக்கும் சிறை அறைக்கு மற்ற பெண் கைதிகள் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இரும்பு கதவு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வகையில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று ‘டைம்ஸ் நவ்’ மற்றும் சில கன்னட தொலைக்காட்சி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. 

சிறையில் ஆய்வு செய்தபோது தான் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டு இருப்பதாக ரூபா தனது 2-வது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறி வெளியான வீடியோ காட்சிகள் சசிகலா அறைதானா? என்பதை கர்நாடக நிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள ரூபா, உயர் அதிகாரிக்கு தாக்கல் செய்து உள்ள அறிக்கையில் சிறையில் சசிகலாவிற்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, சிறப்பு ஏற்பாடாக பூட்டப்படாமல் 5 அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்