சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் என புகார், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக பதவியேற்ற டி.ஐ.ஜி. ரூபா பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பிய கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு டி.ஐ.ஜி. ரூபா அளித்த பதிலில், சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாக அறிக்கை வழங்கினார்.
ரூபா அளித்து உள்ள அறிக்கையில், சோதனையின் போது சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
சிறை விதிமுறைப்படி இது தவறு. இந்த சலுகை இன்னும் தொடருவதாக உள்ளது. இதற்காக தங்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் ஆய்வு செய்ததை எதிர்த்து எனக்கு நோட்டீசு அனுப்பி உள்ளீர்கள். சிறைத்துறை டி.ஐ.ஜி. என்ற முறையில் சிறையில் ஆய்வு செய்ய எனக்கு உரிமை உள்ளது. அதன்படி ஆய்வு செய்துள்ளேன். இதுபற்றி விசாரணை நடத்தி பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தங்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள களங்கத்தை போக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூபாவின் அறிக்கை சமர்பித்த நிலையிலும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடக முதல் - மந்திரி பெங்களூரு சித்தராமையா, பெங்களூரு மத்திய சிறையில் முறைகேடுகள் நடந்து உள்ளது என்பது மிகவும் முக்கியமான விவகாரமாகும், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை வெளியான பின்னர், யாராவது தவறு செய்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.