சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் இல்லவே இல்லை சிறைத்துறை டிஜிபி- ஆதாரம் இருக்கு டிஐஜி ரூபா

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் இல்லவே இல்லை என சிறைத்துறை டிஜிபி கூறி உள்ளார். ஆதாரம் இருக்கு என மீண்டும் டிஐஜி ரூபா கூறி உள்ளார்.

Update: 2017-07-13 07:35 GMT
பெங்களூர்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக டி.ஐ.ஜி. ரூபா பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் இந்த திடீர் சோதனை தொடர்பாக டி.ஐ.ஜி. ரூபாவிற்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலும் சோதனையின் போது தெரிய வந்த விவரங்கள் குறித்தும் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு டி.ஐ.ஜி. ரூபா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் டிஜிபி சத்திய நாராயணா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து தர 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா இன்று விளக்கம் அளித்தார். அப்போது, தாம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என கூறினார்.

சசிகலாவிற்கு சிறையில் எந்த வசதியும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் சிறைக்குள் கைதிகள் சமையல் வேலை செய்வது விதிகளுக்குட்பட்டது தான் என்றும் சத்திய நாராயணா கூறியுள்ளார்.

இந்தநிலையில் பரபரப்பு குற்றம்சாட்டிய ரூபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சிறையில் ஆய்வு செய்து நான் கண்டறிந்ததை டிஜிபிக்கு புகாராக அனுப்பியுள்ளேன். சிறைத் துறை இயக்குநர் சத்தியநாராயண ராவுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இல்லை.

உரிய விசாரணைக்கு பிறகே சசிகலா விவகாரம் குறித்து டிஜிபி தத்தாவுக்கு புகார் அனுப்பினேன். சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றார் ரூபா.

மேலும் செய்திகள்