இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட உதவ தயாராக இருக்கிறோம்: சீனா சொல்கிறது
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட ஆக்கப்பூர்வமான வகையில் உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்,
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நிலவும் முரண்பாடுகள் உலகநாடுகளின் கவனத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள சீனா, அமர்நாத் யாத்திரை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி வாய் திறக்கவில்லை.
சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூங் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- காஷ்மீரில் நிலவும் சூழலானது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் மோதலானது இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அமைதியை மட்டும் அல்லாது பிராந்தியத்தையும் பாதிக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் தெற்காசியாவின் மிகமுக்கியமான நாடுகள் ஆகும். எனவே, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறது” என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினையில் சீனாவின் பங்கு என்னவாக இருக்கும் என்று பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சீன செய்தி தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது பேச்சின் போது, அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீன செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அண்டை நாடுகள் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சீனா இதுவரை மவுனம் காத்து வருகிறது.