போலி சாதிச் சான்றிதழை கொண்டு வேலையில் சேர்ந்தவர்களின் பதவியை பறிக்கலாம் சுப்ரீம் கோர்ட்டு
போலி சாதிச் சான்றிதழை கொண்டு வேலையில் சேர்ந்தவர்களின் பதவியை பறிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு போலி சாதிச் சான்றிதழை கொண்டு வேலையில் சேர்ந்து இருந்தாலோ, பட்ட படிப்பில் சேர்ந்து இருந்தாலோ அது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெகர் மற்றும் டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் போலி சாதிச் சான்றிதழை கொண்டு அரசு பணியில் சேர்ந்திருந்தாலோ அல்லது இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றிருந்தாலோ சட்டப்படி குற்றமாகும். அப்படி சேர்ந்தவர்களது பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம். தண்டனை கொடுக்கவும் வேண்டும் என கூறிஉள்ளது.
மராட்டிய மாநிலத்தில் போலி சாதி சான்றிதழை கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீதும், இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரிகளில் இடம்பிடித்தவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இதற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மராட்டிய மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
இப்போது போலி சாதிச் சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தால் பணி அல்லது பட்டத்தை உடனடியாக பறிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது. இருப்பினும் இந்தத் தீர்ப்பை முன்தேதியிட்டு செயல்படுத்த முடியாது. இனிவருங்காலங்களில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.