பாலியல் வன்முறை வழக்கு: சசிகலா புஷ்பா எம்.பி.யின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பாலியல் வன்முறை வழக்கில் முன் ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது கணவர் தாக்கல் செய்த மனுவை ஒத்திவைத்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-07-04 22:06 GMT
புதுடெல்லி, 

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் பாலியல் வன்முறை புகார் கொடுத்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா எம்.பி உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து 4 பேரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சசிகலா புஷ்பா, அவருடைய கணவர், மகன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவும், கையெழுத்து மோசடி தொடர்பாக வழக்கு பதிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மற்றொரு மனுவும் தாக்கல் செய்தனர்.

ஒத்திவைப்பு

அதை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும், சசிகலா புஷ்பா தரப்பு 4 வாரங்களில் பதில் மனுவும், தமிழக அரசு 2 வாரங்களில் எதிர் பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், மோகன் எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் தரப்பில் வக்கீல் அபினவ் ராவ் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜரானார்.

இரு தரப்பிலும் பதில் மனு, எதிர் பதில் மனு ஆகியவை தாக்கல் செய்தது குறித்து உறுதி செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான இறுதி விசாரணை ஒரு வாரத்தில் துவங்கும் என்று அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். 

மேலும் செய்திகள்