தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி

தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2017-07-04 23:15 GMT
புதுடெல்லி,

சென்னையை சேர்ந்த முருகவேல் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது 2016-17-ம் ஆண்டில் பிளஸ்-2 வகுப்பு தேறிய மாணவர்களுக்கும் முன்பு அளித்ததுபோல நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், சபரீஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:-

2015-16-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கு பிளஸ்-2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் யாரும் எதிர்பாராதவிதமாக மருத்துவ கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது.

மேலும் தமிழக மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு தான் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த கல்வியாண்டில் செய்ததுபோல தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டும் விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இதற்கு தலைமை நீதிபதி, பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டங்கள் தான் அமலில் இருக்கின்றன. அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டங்களில் தான் மாணவர்கள் பெரும்பாலும் கல்வி கற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில பாடத் திட்டத்துக்காக நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரினால் அது சாத்தியமாகாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்