கவர்னர் என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார்: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

கவர்னர் என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2017-07-04 14:20 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில கவர்னராக உள்ள கேசரிநாத் திரிபாதி தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது: - “கவர்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினார். இன்று என்னை கவர்னர் அவமானப்படுத்திவிட்டார். இது போன்று என்னிடம் பேச வேண்டாம் என்று கவர்னரிடம் நான் கூறிவிட்டேன். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், ஆனால், கவர்னர் நியமனம் செய்யப்பட்டவர்தான். 

கவர்னரின் செயல் பா.ஜ.க.வினர் பேசுவது போல் உள்ளது. இது என்னை வருத்தமடைய செய்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.அவர் பா.ஜ.க. வட்டச் செயலாளர் போல் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்கு இது ஏற்புடையதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பெரிதாக பேசுகிறார். நான் யாரிடமும் இருந்தும் கருணையை எதிர்பார்க்கவில்லை’’ என தெரிவித்துள்ளார்.  

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற இடத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் குறித்து கேட்டறிய மம்தா பானர்ஜியை கவர்னர் தொடர்பு கொண்டு பேசுகையில், மேற்கண்ட சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடலின் போது கவர்னரிடம், அமைதியை கொண்டு வர தனது நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மம்தா பானர்ஜி உறுதி அளித்தாக தகவல்கள் கூறுகின்றன. 

கவர்னர் திரிபாதி மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த டிசம்பர் 2016 ஆம் ஆண்டு, சுங்கச்சாவடிகளில் ராணுவம் நிறுத்தப்பட்டு இருப்பதாக மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இதற்கு, மம்தா பானர்ஜியை கடிந்து கொண்ட கவர்னர், ராணுவம் போன்ற பொறுப்புமிக்க அமைப்பு மீது ஒவ்வொரு தனிநபரும் மிகவும் கவனத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்